Saturday 5 June 2021

அலையும் கரைதலும்

 தாழ்வாய் பறக்கின்ற
        புறாக்களும்
தனைமறந்து களிக்கின்ற
       மனிதக் கூட்டமும்...!

மேற்கே மறைகின்ற
       வேலையில்
அலைகளின் ஆராவாரத்தில்
       முறிந்து போகின்ற
கதிரவனின் 
       கதிர்வீச்சு...!

பாதுகாப்பென
      வட்டமிட்டு பறக்கின்ற
இரும்பு பறவைகளும் - அங்கே
     இருகிய மனமும்
இளகுகின்ற சிறுவர்களின்
     பொன் சிரிப்பும்...!

விதையின்றி பூத்திருந்த
      மேகப் பூக்களும்
விரைந்து வட்டமிட்டு 
      பறந்து மறைகின்ற
பருந்து கூட்டமும்...!

உயிரின்றி 
     உருண்டு வந்த மரக்கட்டையும்
உற்சாகமாய் 
     பின் தொடர்ந்த 
சிறுவர் கூட்டமும்...!

கண்ணீர் துளியில் 
     கரைந்த  கனவுகளும்
காலம் பதில்
    சொல்லுமென்று காத்திருந்த
இரவுகளின் வலிகளும் - இங்கு
     வந்து செல்லும்  
அலைகளில் 
     கரைவதாய்...!

Saturday 4 July 2020

குளக் கரையும் புயல் காற்றும்

மின்னல் கீற்று 
     வானம் கிழித்து அம் 
மலை முகடுகளில் 
      மறைந்தது...!

மிதமாய் 
      பொழிந்த மழை 
திசை மாறி 
       பேய் மழையாய்
மெய் சிலிர்க்கச் 
        செய்தது... !

தறிகெட்டு படிகளில் 
       உருண்டு வந்த 
தகரம் போல்
       தாறுமாறாய்
ஒலி எழுப்பி 
        உள்ளம் உறையவைத்து 
 மறைந்த விட்ட
         இடி முழக்கம்... !

கனத்த குரலில் 
‌        கரைந்தபடி கூடுகளை 
தேடிச்சென்ற 
        காக்கை கூட்டம்..!

கரையோரம் முறிந்து 
       விழுந்திருந்த 
எருக்கம் 
        பூக்கள்... !

ஆற்றுப்படுத்த 
        யாருமில்லையென்ற 
 தொனியில் 
        மீண்டும் மீண்டும்
  கரையை மோதிச் 
         சென்ற அலைகள்...!

இரையைத் 
        தேடி தேடி 
 இறகு வலிக்க 
        பறந்து திரிந்த
கொக்குகள்...!

பாதி மூழ்கி 
          மீதியில்
மூச்சுவிடும்
           சலவைக் கல்...!

முறிந்த கிளையுடனும்
         சருகாய் - தரையில் 
 விரிந்த
         கனிகளுடன் 
கண்ணில் பதிந்த - அக்
         கரையின் காவலனாய்
தலைமுறை கடந்த 
         ஆலமரம்...!

Tuesday 30 June 2020

வேலி

அரணைக்  காக்க
       அங்கே
ஆருயிர்  துறக்கும்
        அன்பு நெஞ்சங்கள்...!

மனிதமில்லா
      கூட்டம் இங்கே
 மனிதப்
      பாதுகாவலனாய்...!
   
கண்களில் எரியும்
      நெருப்புடன்
அக்கிரமிப்பை
       விலக்கிக்கொள்ள
 ஆணையிடும்
        அணிவகுப்பு...!

கலந்துவிட்ட
       கலப்பினில்
கண்ணிமையும்
      கரையானாகிவிட
வழிகின்ற
        கண்ணீர் துளிகள்..!

நடுங்கும் குளிரிலும்
       நொடியினில் மறையும்
நடைபாதை சூழலில்
      ஆயுதம் ஏந்தும்
 தேசபக்தி...!

நட்பினில்
       கைகோர்க்க  வேண்டிய
கரங்கள் - இன்று
       நலிந்தவர்களை
நசுக்குகின்ற
      நடைமுறையில்..!

எதை  இழந்தாலும்
        மனிதமிங்கே
வாழவேண்டுமென்ற
        நிலைமாறி...!

எதை   இழந்தேனும்
       செல்வம்  சூழ
வாழ  வேண்டுமென்று
       பயணிக்கின்றோம் ...!

Sunday 24 May 2020

இயற்கையும் மனிதனும்

இலை கொடிகளுக்கு
      உயிர் கொடுத்த
மழைத்துளிகள்
      மெல்ல மெல்ல அதன்
சலசலப்பை கூட்டி சென்ற
      தென்றல் காற்று...!

கூடுகள் தோறும்
        பிஞ்சிப் பறவைகளின்
கீச்சுக் குரல்
       இரைதேடச்செல்லும்
தாய் பறவையின்
       பிரிவு தாளாமல்...!

கண்ணுக்கு தெரியாத
        விஷக்கிருமியில்
காற்றும் விஷமாகும்
        வருத்தத்தில்
மனித இனம்
         பயந்து கிடக்க...!

வாழ்வு என்று முடியும்
          வருத்தமில்லா
தோரணையில்
           இயற்கை மட்டும் - தன்
இயல்பு மாறாது
        மாறிக்கொண்டிருக்கிறது...!

வாழத் தெரியாத
       வழித்தடத்தில்
மனித இனம்
        வதை பட்டிருக்க
எத்தனையோ
         யுகங்கள் கடந்த
 பட்டறிவுதான்
        உந்தன் சாந்த
சாம்ராஜ்ஜியத்தின்
        வெளிப்பாடோ...!

Friday 22 May 2020

வழித்தடம்

பூத்த மலர்கள்
        கனத்த காற்றின்
வலிமையில்
       வழியெங்கும்
சிதறிக்கிடக்க...!

காலைப் பொழுதின்
        புத்துணர்ச்சியில்
கீச்சுக்குரல் இட்டு
        இங்கும் அங்கும்
ஓடித்திரிந்த
        அணில் பிள்ளை...!

மென் பனி
        விலகி
கதிரவன்
         மென் ஒளியை
கிரகித்து
        புன்முறுவல் பூத்த
இலைகளின்
        புதுவரவு...!

மின்னுகின்ற
       வழித்தடத்தில்
வரிசையாய்
       வந்து நின்ற
மகிழ்வுந்துகளும் அதன்
       முன்விளக்கு
ஒளி பட்டு
       பிரதிபலித்த
நல்வரவு
        வாசகமும்...!

Saturday 9 May 2020

ராஜ ராஜ சோழன்

கடல்  கடந்தும்
     தன் கொடி 
நிலைநாட்டிய
     போர்  வாள்...!

அன்புக்காக
     அரியணை 
துறந்த
      இளம்  துறவி..!

எம் மதமும்  
     சம்மதமென
வாழ்ந்து  சென்ற
    வள்ளல்..!

நட்புக்காக  தன்
      உயிரையும்
துச்சமென
      நினைத்த சமுத்ரா
தேவியின்  மகன் ...!

வறுமையின்றியும்
       வான்முட்டும்
கோபுரமைத்த
       உலக விந்தை ...!

மக்கள்
        மனதிலும் தன் 
தாய் தந்தையர்  
       இருதயத்திலும்
நீங்காமல் நிலைத்திருந்த
       கோமகன்..!

தரணியின்
      பொற்காலம்  தோன்ற
அப்பொன்னி தேவியே
        உயிர்  கொடுத்த
தவப் புதல்வன் ...!

Thursday 7 May 2020

அருவி

தூங்கும் அருவியும்
         துயில் கலைக்கும்
காலைக் கதிரவனும்
        தோகை விரித்து நின்ற
மயிலும்
         தோன்றி மறைந்த
வானவில்லும்...!

விட்டு விட்டு
      பொழிகின்ற
வானிலையும் அங்கே
      மென்மையாய்
ஷ்பரிசம் தொட்டு
      செல்லும் - ஈரக்
காற்றும்...!

மலை மீது மோதி
     திரும்புகின்ற
மேகங்களும்
     திசைமாறாமல்
பயணிக்கின்ற
     நதி நீரும்...!

துள்ளிக் குதித்தோடும்
      மீன் குஞ்சுகளும்
மவுனமாய்
      தூரத்தில் இரை தேடி
காத்திருக்கும்
      முதலையும்...!

நீண்டு நெடுந்துயர்ந்த
       மரங்களும்
தன் கூட்டருகே
      பறந்து வந்த
பருந்து கண்டு
     ஆர்பரிக்கும்
பறவைக்  கூட்டமும்...!

தாயின் முகம்
     பார்த்து
புன்னகைக்கும்
      குழந்தையும்
மனம் மயங்கும்
      வண்ணத்தில்
புதிதாய்
       பிறந்திருந்த
பூக்களும் சேர்ந்து
      வனப்பூட்டின
அவ் வான்மகளின்
     குழந்தைக்கு...!