Saturday, 4 July 2020

குளக் கரையும் புயல் காற்றும்

மின்னல் கீற்று 
     வானம் கிழித்து அம் 
மலை முகடுகளில் 
      மறைந்தது...!

மிதமாய் 
      பொழிந்த மழை 
திசை மாறி 
       பேய் மழையாய்
மெய் சிலிர்க்கச் 
        செய்தது... !

தறிகெட்டு படிகளில் 
       உருண்டு வந்த 
தகரம் போல்
       தாறுமாறாய்
ஒலி எழுப்பி 
        உள்ளம் உறையவைத்து 
 மறைந்த விட்ட
         இடி முழக்கம்... !

கனத்த குரலில் 
‌        கரைந்தபடி கூடுகளை 
தேடிச்சென்ற 
        காக்கை கூட்டம்..!

கரையோரம் முறிந்து 
       விழுந்திருந்த 
எருக்கம் 
        பூக்கள்... !

ஆற்றுப்படுத்த 
        யாருமில்லையென்ற 
 தொனியில் 
        மீண்டும் மீண்டும்
  கரையை மோதிச் 
         சென்ற அலைகள்...!

இரையைத் 
        தேடி தேடி 
 இறகு வலிக்க 
        பறந்து திரிந்த
கொக்குகள்...!

பாதி மூழ்கி 
          மீதியில்
மூச்சுவிடும்
           சலவைக் கல்...!

முறிந்த கிளையுடனும்
         சருகாய் - தரையில் 
 விரிந்த
         கனிகளுடன் 
கண்ணில் பதிந்த - அக்
         கரையின் காவலனாய்
தலைமுறை கடந்த 
         ஆலமரம்...!

No comments: