Thursday, 28 May 2015

பற்றாக்குறை

அச்சடித்த
        காகிதங்களும்
அர்த்தமற்றுப்
       போகும்...!

ஆனையிட்ட
      அரசவையும்
தொலைந்ததுவிட்ட
      ஆயுதமாம்
கலப்பையினை
     தேடி ஓடும்...!

தோற்கடிப்பதில்
       இருக்கும்
சந்தோசம் அன்று
      நம்மில்
தொலைந்து போகும்
      என்றோ
தொலைத்துவிட்ட
      நிம்மதியின்
இரகசியம் தேடி...!

உடைமைகளும்
      ஊனமாகும்
உயிர் வாழச்
     சொல்லும்
உணவிற்கு
     வந்ததுவிட்ட
வறுமையால்...!

சேறு மிதிக்கும்
      சமூகத்திற்கும்
கூட்டம் கூடும்
      உலக வாழ்வின்
உண்மையான
      சேவகர்கள்
என்று சொல்லி...!

Saturday, 9 May 2015

அழகு

மலை முகடுகளில்
      உலவுகின்ற
முழு நிலவு...!

பனியினை
     மெல்ல மெல்ல
கரைத்துக்
     கொண்டிருந்த
தென்றல்...!

தென்னையில்
     வாழ்திருந்து
விழுகையில்
     தோகை விரித்த
மயில்...!

விடியலை
     கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கிக்
     கொண்டிருந்த
மை இருட்டு...!

முகம்
      பார்க்கும் முன்னே
சேயினை முழுதாய்
      நேசிக்கின்ற
தாய் மனம்...!

பிழையே ஆனாலும்
      மழலையின்
மழுங்கிய
   முதல் உச்சரிப்பு...!

Thursday, 16 April 2015

கர்வம்

மழலை தொடங்கி
     மடியும் வரை
மனிதம் மறக்காமல்
     சேர்த்து வைக்கும்
ஒற்றை எதிர்மறை...!

நிழல்களில்
    தெரிவதில்லை ஆனாலும்
நிஜத்தினில்
    நெருடுகின்ற
நினைவுகளின்
    முதற் புள்ளி...!

இது
     தொலைந்து போகையில்
தொடர்வதும்
     தொடர்கையில்
தொலைவதுமாய் - நம்
    மன நிம்மதி...!

Wednesday, 18 March 2015

இழப்பு

நட்சத்திர ஒளித்
     துகள்கள் தூவிய
மழையினிலே
     நனைகின்ற பூமி...!

அலைகடல் அள்ளிக்
      கொண்டுவந்து
வீசிய சாரலில்
       உருண்டு வந்த
வெண் சங்கு...!

அச்சப்பட்டு
      அனைத்தையும்
ஓட்டுக்குள்
      அடக்கிக் கொண்ட
ஆமை...!

ஆழத்தின் அளவில்
      அமைதி கொண்ட
கடலின்
      மையப் புள்ளி...!

சந்திரனும் தென்றலும்
       கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
      மனித மனங்கள் ...!

Thursday, 19 February 2015

இனிமை

மரங்களின் வெறுமை
       வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
      முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
      நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
     புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
      உருவாக்கிய சங்கீதம்...!

மின்னலின் கீற்று
       தொட்டுச்சென்ற
மலை முகடு
       வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
       விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
        இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
       எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
        மழலையின் குரலினிமை...!