Friday, 25 November 2011

கடற்கரை

ஈரத்தை சுமந்த காற்றின்
      மெல்லிய வருடல்...

கண் இமைக்கும் பொழுதில்
      கால்களை நனைத்து செல்கின்ற
கடல் அலை.....

அந்த வானத்தை வருடுகின்ற
      நீரின் நீல நிற தோற்றம்....

பேரலை வந்தாலும்
     ஒய்யாரமாய் நிற்கின்ற
மனித வாகனம்.....

அலையால் கரையை தொட்டாலும்
      அடுத்த நிமிடம்
மண்ணுக்குல் புதைகின்ற
      மண்ணுயிர்கள்....

முத்தையே சுமந்தாலும்
      கரையில் எறியப்படுகின்ற
கிளிஞ்சல்கள்.....

சுற்றிவந்த களைப்பில்
     ஓய்வெடுக்கின்ற கரையோர
கட்டு மரங்கள்...

வாழ்வின் இறுதிவரை ஓடினாலும்
     வாழப்போகின்ற நம்பிக்கை கொடுக்கும்
கலங்கறை விளக்கு....

Saturday, 19 November 2011

மழை

மேகத்தை 
    துரத்திதுரத்தி
வலிமை 
    காட்டும் காற்று...!

மெல்ல மெல்ல
        தரையிறங்கிய
மின்னல் ஒளி
       விட்டுச் சென்ற
ஒளிச் சிதறல்...!

மண் வாசனையை
    விதவிதமாய்
துவக்கி வைக்கும்
    மண் மழையின்
கலப்பு...!

வானிலை 
      மாற்றத்தில்
துள்ளிக் குதித்து
      ஓடுகின்ற
காளைக் கன்று...!

தாய் பறவையின்
      கதகதப்புக்கு
சிறகுக்குள்
      புகுந்து கொண்ட
சிறு பறவை...!
புதிதாய்
       குடை பிடித்த
வெண் காளான்களும்
        அதனருகே
 மழைக்கு ஒதுங்க
      ஒன்று சேர்ந்த 
சித்தெறும்புக்
       கூட்டமும்...!

சாரலில் 
     சுருண்டாலும்
உயிர் கொடுத்த  
     மழைநீருக்கு
புன்னகையில் 
    நன்றி கூறி
கண்ணீர் தாங்கும்
    புதுப்பூக்கள்....!

எழுகின்ற வானில்
        எங்கள் குலம்
வாழ்ந்து கிடக்க
       வானம் பார்த்து
தலை வணங்கி
       நின்றிருந்த 
உழவுக் கூட்டம்...!

அங்கே
      குடிசைக்குள்ளிருந்து
ஒற்றைக் கண்
      மூடி சிரித்த
சிறுவன்...!



Friday, 18 November 2011

அதி காலை

பனித்துளியுடன் புல்வெளி அங்கே
      பறந்து செல்கின்ற
பட்டாம் பூச்சி...!

எழுகின்ற சூரியனின்
    முகப் பொலிவினை
மூடிய கருப்புத் திரையை
     கிழித்துக் கொண்டு வந்த
மெல்லிய கதிர் வீச்சு...!

கொடுத்து விட்ட குரலிள்
      இருள் விலகுவதாய்
கொக்கரிக்கின்ற சேவல்...!

இரவு மீதான பகலின் வெற்றியை
      தம் பல குரல் காட்டி
ஆராவரிக்கும் பறவைகள்...!

நிசப்த நிலமாய்
     நிஜமான ஆற்றலை
உயிரினத்துக்குள் புகுத்துகின்ற இந்த
     அழகான காலை...!

Sunday, 6 November 2011

அன்னை

பாதி வயிறு பசித்திருந்தாலும்
    அவள் பாலூட்ட மறந்ததில்லை......

அழுக்கான ஆடைகளை
    அழகென உடுத்தியிருந்தாலும் நம்
ஆடைகளை சலவை செய்ய மறந்ததில்லை.....

வாழ்வின் மரபினையும்
    கழற்றி வாழ்ந்தவள் நம்
வாழ்வில் மாற்றம் வர....

அவள் கை ஒரு பிடி சோறும் அமிர்தம்
    அக்கலங்கமற்ற அன்பு கலப்பதால்......

Saturday, 5 November 2011

நன்றி


வாழ்வின் வலிமையில் வலிகளை எண்ணிக்கொண்டிருந்தவன் சந்தோச நிமிடங்களை சேகரிக்க தொடங்கினான்.........


கருவிழிக்குள் கண்ணீரும்
      கண்ணீரின் கருவறையான
வடுக்களை சுமந்தவனின்
     இதயத்தில் புதைந்திருந்த
சிறகுகளை விரிய வைத்த
    அந்த இருவிழிப்பார்வைக்கு....