Saturday, 25 January 2025

மது விலக்கு

வியர்வை சிந்தி

     உழைத்த பணம்

வீடு வருவதில்லை

     விற்று தீர்ந்த

கணக்கு நம்

     வியப்பை குறைத்ததில்லை...!


ஊர் மதிக்க

        வாழ வெண்டுமென்று

வளர்த்தெடுத்த 

        பிள்ளை - இன்று

வீதியிலே கிடக்க

        தன்மானம்  கூட 

மிஞ்சலையே

        வற்றிய கண்ணீரில் 

வாழ்வு மாற

       தவம் கிடக்கும்

பெற்றோர்...!


இளம் வயதிலேயே

      வாழ்வைத் தொலைத்த

பெண்களின் 

       எண்ணிக்கை - இங்கு

குறையாவிட்டாலும் - அரசு

       விற்பனை சரியில்லையென்று

வீதியெங்கும் 

       விரிவாக்க மறப்பதில்லை...!


தனைமறக்க

      ஏற்றுக்கொள்ளும்

போதையும்

      தடுக்க நினைக்காத

 அரசியல்வாதிகளின்

      சுயநலமும்

தடம் புரண்ட

     இளைஞர்களின்

சுய வாழ்வின்

     புதைக் குழி...!

Saturday, 5 June 2021

அலையும் கரைதலும்

 தாழ்வாய் பறக்கின்ற
        புறாக்களும்
தனைமறந்து களிக்கின்ற
       மனிதக் கூட்டமும்...!

மேற்கே மறைகின்ற
       வேலையில்
அலைகளின் ஆராவாரத்தில்
       முறிந்து போகின்ற
கதிரவனின் 
       கதிர்வீச்சு...!

பாதுகாப்பென
      வட்டமிட்டு பறக்கின்ற
இரும்பு பறவைகளும் - அங்கே
     இருகிய மனமும்
இலகுகின்ற சிறுவர்களின்
     பொன் சிரிப்பும்...!

விதையின்றி பூத்திருந்த
      மேகப் பூக்களும்
விரைந்து வட்டமிட்டு 
      பறந்து மறைகின்ற
பருந்து கூட்டமும்...!

உயிரின்றி 
     உருண்டு வந்த மரக்கட்டையும்
உற்சாகமாய் 
     பின் தொடர்ந்த 
சிறுவர் கூட்டமும்...!

கண்ணீர் துளியில் 
     கரைந்த  கனவுகளும்
காலம் பதில்
    சொல்லுமென்று காத்திருந்த
இரவுகளின் வலிகளும் - இங்கு
     வந்து செல்லும்  
அலைகளில் 
     கரைவதாய்...!

Saturday, 4 July 2020

குளக் கரையும் புயல் காற்றும்

மின்னல் கீற்று 
     வானம் கிழித்து அம் 
மலை முகடுகளில் 
      மறைந்தது...!

மிதமாய் 
      பொழிந்த மழை 
திசை மாறி 
       பேய் மழையாய்
மெய் சிலிர்க்கச் 
        செய்தது... !

தறிகெட்டு படிகளில் 
       உருண்டு வந்த 
தகரம் போல்
       தாறுமாறாய்
ஒலி எழுப்பி 
        உள்ளம் உறையவைத்து 
 மறைந்த விட்ட
         இடி முழக்கம்... !

கனத்த குரலில் 
‌        கரைந்தபடி கூடுகளை 
தேடிச்சென்ற 
        காக்கை கூட்டம்..!

கரையோரம் முறிந்து 
       விழுந்திருந்த 
எருக்கம் 
        பூக்கள்... !

ஆற்றுப்படுத்த 
        யாருமில்லையென்ற 
 தொனியில் 
        மீண்டும் மீண்டும்
  கரையை மோதிச் 
         சென்ற அலைகள்...!

இரையைத் 
        தேடி தேடி 
 இறகு வலிக்க 
        பறந்து திரிந்த
கொக்குகள்...!

பாதி மூழ்கி 
          மீதியில்
மூச்சுவிடும்
           சலவைக் கல்...!

முறிந்த கிளையுடனும்
         சருகாய் - தரையில் 
 விரிந்த
         கனிகளுடன் 
கண்ணில் பதிந்த - அக்
         கரையின் காவலனாய்
தலைமுறை கடந்த 
         ஆலமரம்...!

Tuesday, 30 June 2020

வேலி

அரணைக்  காக்க
       அங்கே
ஆருயிர்  துறக்கும்
        அன்பு நெஞ்சங்கள்...!

மனிதமில்லா
      கூட்டம் இங்கே
 மனிதப்
      பாதுகாவலனாய்...!
   
கண்களில் எரியும்
      நெருப்புடன்
ஆக்கிரமிப்பை
       விலக்கிக்கொள்ள
 ஆணையிடும்
        அணிவகுப்பு...!

கலந்துவிட்ட
       கலப்பினில்
கண்ணிமையும்
      கரையானாகிவிட
வழிகின்ற
        கண்ணீர் துளிகள்..!

நடுங்கும் குளிரிலும்
       நொடியினில் மறையும்
நடைபாதை சூழலில்
      ஆயுதம் ஏந்தும்
 தேசபக்தி...!

நட்பினில்
       கைகோர்க்க  வேண்டிய
கரங்கள் - இன்று
       நலிந்தவர்களை
நசுக்குகின்ற
      நடைமுறையில்..!

எதை  இழந்தாலும்
        மனிதமிங்கே
வாழவேண்டுமென்ற
        நிலைமாறி...!

எதை   இழந்தேனும்
       செல்வம்  சூழ
வாழ  வேண்டுமென்று
       பயணிக்கின்றோம் ...!

Sunday, 24 May 2020

இயற்கையும் மனிதனும்

இலை கொடிகளுக்கு
      உயிர் கொடுத்த
மழைத்துளிகள்
      மெல்ல மெல்ல அதன்
சலசலப்பை கூட்டி சென்ற
      தென்றல் காற்று...!

கூடுகள் தோறும்
        பிஞ்சிப் பறவைகளின்
கீச்சுக் குரல்
       இரைதேடச்செல்லும்
தாய் பறவையின்
       பிரிவு தாளாமல்...!

கண்ணுக்கு தெரியாத
        விஷக்கிருமியில்
காற்றும் விஷமாகும்
        வருத்தத்தில்
மனித இனம்
         பயந்து கிடக்க...!

வாழ்வு என்று முடியும்
          வருத்தமில்லா
தோரணையில்
           இயற்கை மட்டும் - தன்
இயல்பு மாறாது
        மாறிக்கொண்டிருக்கிறது...!

வாழத் தெரியாத
       வழித்தடத்தில்
மனித இனம்
        வதை பட்டிருக்க
எத்தனையோ
         யுகங்கள் கடந்த
 பட்டறிவுதான்
        உந்தன் சாந்த
சாம்ராஜ்ஜியத்தின்
        வெளிப்பாடோ...!