Wednesday, 18 March 2015

இழப்பு

நட்சத்திர ஒளித்
     துகள்கள் தூவிய
மழையினிலே
     நனைகின்ற பூமி...!

அலைகடல் அள்ளிக்
      கொண்டுவந்து
வீசிய சாரலில்
       உருண்டு வந்த
வெண் சங்கு...!

அச்சப்பட்டு
      அனைத்தையும்
ஓட்டுக்குள்
      அடக்கிக் கொண்ட
ஆமை...!

ஆழத்தின் அளவில்
      அமைதி கொண்ட
கடலின்
      மையப் புள்ளி...!

சந்திரனும் தென்றலும்
       கை கோர்த்து
அள்ளிக் கொண்டுபோன
      மனித மனங்கள் ...!

Thursday, 19 February 2015

இனிமை

மரங்களின் வெறுமை
       வானத்தின் வெளுப்பு
இமை வருடிய காற்று
      முகம் காட்டா குயில்
கொண்டுவந்த கானம்
      நதிமகளின் தாலாட்டில்
மிதந்து வந்த
     புல்லாங்குழல் - அங்கும்
போட்டியிட்ட மூங்கில்
      உருவாக்கிய சங்கீதம்...!

மின்னலின் கீற்று
       தொட்டுச்சென்ற
மலை முகடு
       வீதியெங்கும்
ஒன்றிரண்டாய்
       விதைக்கப்பட்ட
மழைத்துளிகள்
        இலையுதிர் காலத்திலும்
உதிராத நினைவுகள்
       எடுத்துவந்த சந்தோசமாய்
விட்டு விட்டுப் பேசிய - அம்
        மழலையின் குரலினிமை...!

Thursday, 12 February 2015

கொடியும் சிறுவனும்

முகம் மறைக்கும்
    உறை பனி
காற்றில் மிதந்து வந்த
       மித மழைச் சாரல்
அங்கே
       நேசமும் தூய்மையும்
நிறைந்த சிறுவனின்
        நெஞ்சம் சுமந்திருந்த
மூவர்ணக்கொடி...!


மண்ணின் மரபுகளை
        நினைவுக்கு கொண்டுவரும்
முப்படையின் முழக்கம்
       முன் நிற்க
அன்னையின் அன்பினில்
      அசைந்தாடும்
பிள்ளையைப் போல்
      அசைந்திருந்த
மூவர்ணக்கொடி...!

கண்டிருந்த சிறுவனின்
       கண்களில் தாய்மண்ணின்
பெருமை கண்ட
      கர்வம் கொட்டி கிடக்க
அவன் கால்களிலோ
      அழுக்கான
மனங்கள் தரும்
     நெருக்கடியில்
நடக்காத தோரணை...!

Friday, 23 January 2015

இருள் ஒளி

மின்னலின் கீற்றினில்
      முகம் பார்க்கும்
மை இருட்டு - அங்கே
      மரம் சூடிக் கொண்ட
வீண் மீன்களாய்
      மின்மினிக் கூட்டம்...!

அச்சுருத்தும் ஆந்தையின்
       அலறல்கள்
இயற்கையின் படைப்பினில்
       அரக்க உருவம்
கொண்டுவரும்
       மாயத் தோற்றம்...!

ஆளுயர அய்யனாரது
       வாள் முனை- அங்கு
எற்றி வைத்த
       தீப ஒளியில் - எங்கள்
மன இருள்
       விலகுவதாய்
விழுந்திருந்த
        நம்பிக்கையின்
விழுதுகள்...!

Wednesday, 31 December 2014

வளர்ச்சி

சாலையோரப் பூக்கள்
     சங்கீதம் பாடிவந்த
மென் மழை சாரல்
     மரக் கூடுகளில்
உணவூட்டிய
     தாய்ப் பறவை
சர சரவென
      சாலையை
கடந்து சென்ற
     சாரைப் பாம்பு
பதற்றதில்
    தடம் புரண்ட
இரு-சக்கர
    வாகனம்...!
 
வீசிய காற்றின்
      ஆற்றல் அங்கே
உயிர் கொடுக்க - அவன்
      அரைகண் மட்டும்
விழித்திருக்க
      வழி வந்தோர்
வாரி அனைத்து
     வீதி வரை ஓடிவர
ஓலக் குடிசையெங்கும்
     ஓலக் குரல்
நிறைந்துவிட
   நிலை உணர்ந்தவன்
உதடுகள் உச்சரித்த
   ஒற்றை வார்த்தையும்...!

பசியெடுத்து
     உண்ணுகின்ற  உணவு
உழைத்துவிட்ட
     களைப்பினில்
உருவான நல்லுறக்கம்
     உலவுகின்ற
உயிரனங்களை
     உருத்தாத
மன நிம்மதி - இவைகளின்
     சொந்தக்காரன்
வாழுகின்ற குடிலில்
     வளந்திருந்த சந்தோசம்...!