Friday, 25 November 2016

வசந்தம் வரும்

வரம் கிடைக்கு முன்னே
      விரதமெனும் வதைபாடு
இருள் விலகும் முன்னே
      வளம்வரும் சலசலப்பு
நன்மையின் தொடக்கத்தின்
      தீய்மையின் துடிதுடிப்பு...!

வலி உள்ளவர்களின்
       கூச்சல் குரல்
 தினம் தினம் - இங்கு
       ஓங்கி ஒலிக்க...!
   
வதைபடும் கூட்டத்தின்
       கண்களில்
ஏற்றிவத்த கனவுகள்
      கலையாமல்
காக்கின்ற தலைவனின்
      கரங்களின்
வலிமை கூடட்டும்...!

 கருப்பு தாள்கள்
        இங்கு குறையுமோ
இல்லையோ
       எற்றத் தாழ்வுகள்
குறைகின்ற பாதையின்
      முதல் அடி - இன்று
வலியானாலும்
     வசந்தம் வரும்...!

Wednesday, 13 April 2016

மருத்துவம்

இருகண்ணும்
       தொலைந்து போகும்
மை இருட்டு
      இடைவிடாது
கொட்டிச் சென்ற
       கோடை மழை...!

தீண்டிய நாகத்தின்
      திசையறியா
திகைப்பு - அங்கே
     வேய்ந்துவிட்ட கூரை
ஈரக்கற்றில்
     உருவாக்கிய சலசலப்பு...!

யாருமற்ற சாலைகள்
      எமனது வருகையென
ஓலமிட்ட
      மக்கள் கூட்டம்...!

தோகையின்றியும்
      வாசல் வந்த
தேவதை  - துடைத்துச்
       சென்ற கண்ணீர்
துளிகள்...!

Tuesday, 6 October 2015

மருந்து

விடியும் முன்னே
      ஏற்றிவைத்த தீபங்களாய்
அந் நட்சத்திரக்
     கூட்டம்...!

காலைக் கதிரவனின்
     கதகதப்பில்
மறைந்து போகும்
     பனித் துளிகள்...!

மேகம் கறுக்கு
    முன்னே
தோகை விரித்த
     மயில்...!

துலாபாரத்தில்
    வீற்றிருந்தும்
விடாமல் புன்னகைத்த
    சிறுமி...!

தோற்றம் தாண்டி   
     தோள் கொடுக்கும்
தோழனும் - அங்கே
     உயிர் காக்க
ஏழை கொடுத்துவிட்ட
    ஒரு குவளை
தண்ணீரும்...!

Sunday, 6 September 2015

இயற்கை தந்த நம்பிக்கை

மின்னும் 
     வானிலை
மிதக்கும் 
    மேகங்கள்...!
   
நிசப்த 
    நிலம்
நீர் வழி 
    வந்ததில்
காற்று 
   சுமந்து வந்த
ஈரப்பதம்...!

பசுமை  
    ஆடை உடுத்திய
வயல் 
    வெளிகள்
கூடு தேடி 
   பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!

வெட்கத்தில் 
   பாதி முகம் 
காட்டும்
   பிறை நிலவு
மையிருட்டில்
     விளக்கேற்றுவதாய்
மேற்கே
   முளைத்திருந்த வெள்ளி்...!

இருள்
    கவர்ந்தும்
விடியல்
    வருமென
இயல்பாய்
    நெஞ்சுக்குள்
நிலைத்திருந்த
    நம்பிக்கை...!

Tuesday, 25 August 2015

சாலை வழி

வானவில்லின்
      வண்ணங்களை
வெட்டியெடுத்து
      வரைந்து விட்ட
ஓவியமாய் அச்
     சாலை வழி...!

பாதை எங்கிலும்
      வாழ்வின் வழிகாட்டும்
வள்ளுவன் வாக்கினை
      சுமந்து நிற்கும்
மரங்கள்...!

பரந்து விரிந்த
      மரக்கிளையில்
அங்கும் இங்குமாய்
      பறந்து திரிந்த
கிளிக் கூட்டமும்...!

சட்டென விழும்
      சூரியக் கதிரும்
முரிந்து போவதாய்- அக்
       குளத்து நீரின்
சல சலப்பு...!

ஓரமாய் ஓங்கி
    எழுந்த பின்னும்
கர்வம்
    எனக்கில்லை என
தலை குனிந்த
     மூங்கிலடி...!

நீங்காமல்  ஒலித்திருந்த
      இரண்டெழுத்து  மந்திரமும்
வலியவர்
      வயிறு நிறைய
இட்டு வைத்த
     வாழை இலையும்...!